சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா, இன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த விழாவில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரமேஷ்வரன் மற்றும் இ.தொ.காவின் கொட்டகலை பிரதேச சபை உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் கட்சியின் பிரமுகர்கள், வைத்தியர்கள், தாதிமார்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, கலந்து கொண்ட 500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர், உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கொரோனா காலங்களிலும் நோயாளர்களுக்கு சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், கொட்டகலை பிரதேச பகுதிகளில் உள்ள பெண் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.