எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்களும் விசைப்படகொன்றில் கோடியாக்கரை பகுதியில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டவர்கள் எல்லை தாண்டி யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினரால் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இரு தினங்களில் எல்லை தாண்டிய குற்றத்தின் கீழ் 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.