தனியார் பேருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க எரிபொருள் பெற்று தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினால் குறித்த கடிதம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.
நேற்று முந்தினம் அரச பேருந்து சாலையில் எரிபொருள் வழங்க கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். தனியார் பேருந்து சேவையினருக்கு அரச பேருந்து சாலைகளில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையிலான சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கிளிநொச்சி அரச பேருந்து சாலையினர் தனியார் பேருந்து சேவையினருக்கு எரிபொருளை வழங்காது இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் நேற்று முந்தினம் புாராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலயைில் மாவடட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, போராட்டம் நடைபெற்ற அன்றைய தினம் 1000 லீட்டர் டீசல் வழங்குமாறு பணிக்கப்பட்டது. ஆயினும் அன்றைய தினம் டீசல் வழங்காது அரச பேருந்து சாலையினரால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் தலையிட்டு மறுநாள் டீசல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் டீசல் வழங்க அரச பேருந்து சாலையினர் மறுத்த நிலையில் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமது சேவை தடையின்றி நடைபெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் ஒன்றை கையளித்தனர்.
குறித்த பேருந்து சாலை முகாமையாளருடன் தொடர்புகொண்ட அரசாங்க அதிபர் டீசல் வழங்கப்படாமைக்கான காரணத்தை கோரினார். தொழிற்சங்கத்தினர் டீசல் வழங்குவதற்கு தடைகளை ஏற்படுத்துவதாக அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார். அதேவேளை நேற்று முந்தினம் 4 மணிவரை டீசல் பெற்றுக்கொள்வதற்கு தனியார் பேருந்து சேவையினர் வருகை தரவில்லை எனவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்திருந்தார்.
குறித்த நாளன்று டீசல் பெற்று தருமாறு கோரி தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சாலை பிரதான வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், 6 மணியளவில் பொலிசாரின் தலையீட்டினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, அரச பேருந்து சாலை நிர்வாகத்தினரே எரிபொருளை வழங்க இழுத்தடிப்பு செய்தமை அப்பட்டமான வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு நடார்த்தி சுமுகமான தீர்வுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் தெனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.