மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக,வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன அலுவலகத்தில் விவசாய துறைக்கான தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் வர்த்தக,வாணிபத்துறை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
குறிப்பாக எதிர்வரும் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பதற்கு தேவையான உள்ளீடுகள் கிடைக்கப்பெறும் வரையில் நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லையென விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் சிறுபோக அறுவடையின்போது பெறப்பட்ட நெல்லுக்கு இதுவரையில் சிறந்த விலை கிடைக்காமை,நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கு இதுவரை பணம் வழங்காமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சேதனப் பசளைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி அரசாங்கம் கூறிய போது எமது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பல சவால்களுக்கு மத்தியில் தங்களுடைய முழு உழைப்பையும் தியாகம் செய்து, அதனை நடைமுறைப்படுத்தினார்கள். இந்நிலையில் செய்கையின் போது நட்டம் ஏற்பட்டால் ஏக்கருக்கு 40000 நஷ்டஈடு தருவதாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்த நஷ்டஈட்டை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் அடுத்தடுத்து, இரண்டு போகங்களைச் செய்து, மிகப் பெரிய சிரமங்களுக்கு உள்ளான நிலையில் எமது விவசாயிகள் தற்போது பெரும் போகத்துக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சிறு போகத்திலும் விவசாயிகளுக்கென விநியோகிக்கவென கொண்டு வரப்பட்ட 65000 மெற்றிக் தொன் யூரியாவில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 258 மெற்றிக் தொன் யூரியாதான் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இங்கையின் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடத்தில் இருக்கின்ற மிக முக்கியமான மாவட்டமாகவும், விவசாயத்தை சுமார் 80 வீதம் நம்பியிருக்கின்ற மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் மாவட்ட விவசாயிகள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் எந்த அரசியல் வேறுபாடுகளும் இல்லாமல், அரசியலுக்கப்பால் இந்த மாவட்டத்தின் நலன் கருதியும், இந்த நாட்டின் நலன் கருதியும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை அவர்கள் கடந்த சில நாட்களாக மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது மாத்திரமல்லாமல், சமயத் தலைவர்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் திணைக்களம் சார்ந்த அதிகாரிகளோடும் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு தமது பிரச்சினைகள் மற்றும் உடனடித் தேவைகளை எடுத்துக் கூறிவருகின்றனர்.
இந்த அடிப்படையில் தற்போது அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எது எவ்வாறிருப்பினும் இவ்விவசாயிகளுக்கு தற்போது செய்கையை மேற்கொள்ள 8000 மெற்றிக்தொன் யூறியா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது விடயமாக நான் இப்போது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளரோடு தொலைபேசியில் உரையாடினேன்.
இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகின்ற 23 ஆம் திகதிக்குள் 2500 மெற்றிக் தொன் யூறியா தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் 8000 மெற்றிக் தொன் எமக்குத் தேவைப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் விவசாய பிரதிநிதிகள் தற்போதைக்கு 5000 மெற்றிக் தொன் யூரியா தந்தால் ஒருவாறு சமாளிப்போம். அடுத்த ஓரிரு வாரங்களில் மீதியையும் தர வேண்டுமென்றனர். இவ்வாறு கிடைக்கும் பட்சத்தில்தான் 200000 ஏக்கரில் நெற் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும். கடந்த காலத்தில் இரண்டு போகங்களும் யூரியா இல்லாததால் கஷ்டப்பட்டோம்.தற்போது அது கிடைத்தால்தான் சிறப்பாக நெற் செய்கையை மேற்கொள்ள முடியும் என்ற மனோபாவத்தில் உள்ளனர்.
இவற்றோடு டீசல் பிரச்சினை, நஷ்ட ஈட்டு பிரச்சினை,யானைப் பிரச்சினை போன்றவை தொடர்பாகவும் பேசப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பில் நாளை விவசாய அமைச்சின் செயலாளரோடு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாகப் பேசவுள்ளேன். முடிந்தால் விவசாய அமைச்சரையும் சந்தித்து குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் எடுத்துரைப்பேன். மேலும் இந்தமாத இறுதிக்குள் விவசாய அமைச்சர் இங்கு வருவதாகக் கூறியுள்ளார்.
அத்தோடு தாம் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புதரப்பட வேண்டுமென விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்களோடு கலந்துரையாடி நிட்சயம் கலந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் யூரியாவை பல்வேறு மாபியாக்கள் 48000 அதை விட அதிகமாகவும் விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறான சூழல் ஏற்படாதவாறு, 20000 ரூபாய்க்குள் யூரியா நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கப்பட வேண்டும். இதற்கு மேல் விற்றால் அவர்களால் ஈடுகொடுக்க முடியாது.
எனவே விவசாயிகளின் கோரிக்கைகளை முடிந்தவரை பேசித் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என்றார்.