ஹோர்டன் சமவெளி வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஹோர்டன் சமவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் இன்று மாலை ( செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
ஹோர்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் எல்லைப் பகுதியில் உள்ள கிரிகல்பொத்த கீழ்பிரிவின் வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் உள்ளிட்ட நால்வரே, அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த நான்கு சந்தேகநபர்களை கைதுசெய்யும் போது, ஏனைய மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் ஹோர்டன் சமவெளி வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றி நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.