சர்வதேச உளவள தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரையில் பாரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உளவள நிலையத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட உளசமூக ஒன்றியம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
இதன்போது உளவளத்தின் மேம்பாடு தொடர்பிலும் அதன் அவசியம் குறித்தும் பொறிக்கப்பட்ட பல்வேறு பதாகைகளை ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
உளவளத்தினை மேம்படுத்தவேண்டியதன் அவசியம் மற்றும் உளவள பாதிப்புகளினால் ஏற்படும் நிலைமைகள் குறித்தான பதாகைகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்ட உளவள நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் அதிகளவான இளையோர்கள் கலந்துகொண்டதுடன் அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்குகொண்டனர்.