மட்டக்களப்பில் தாழ்நிலங்களில் உள்ள சுமார் 10ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணிகள் நீரில் மூழ்கும் நிலைமை காணப்படுவதனால் முகத்துவாரத்தின் ஆற்றுவாயை வெட்டுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் தமது கோரிக்கையினை வலியுறுத்தும் வகையில் கோசங்களை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மட்டக்களப்பின் தாழ்நிலங்களில் உள்ள விவசாய காணிகள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது.
ஆற்றுவாயை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தபோதிலும் இதுவரையில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக பத்தாயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகள் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் உள்ள ஆற்றுவாயை வெட்டினால் மட்டுமே விவசாயத்தினை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதனை விடுத்து கல்லாறில் உள்ள முகத்துவார ஆற்றுவாயை வெட்டுவதனால் மீனவர்களுக்கும் அப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவுமே முடியும் எனவும் இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர்.