முல்லைத்தீவு மாவட்டத்தின் விளையாட்டுத் துறையில் சாதனை புரித்த வீர வீராங்கனைகளை கெளரவப்படுத்துவதற்கான வர்ண இரவு நிகழ்வு நேற்று( திங்கட்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் சிறப்புற இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் கலந்து சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை பரீட்சை திணைக்கள பரீட்சை ஆணையாளர் M.ஜீவரானி புனிதா மற்றும் முன்நாள் முல்லை மாவட்ட விளையாட்டு வீரரும், தற்போதய யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை நிபுணர் (MBBS MB(plastic surgery) Consultant in Plastic Surgery) Dr.கதிர்வேல் இளஞ்செழியப்பல்லவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கெளரவ விருந்தினர்களாக முல்லை மாவட்டத்தின் முன்நாள் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்றுனரான S.I ஆசைநாதர் மற்றும் கராத்தே குத்துச் சண்டையில் தேசிய பதக்கம் பெற்ற வீரரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய குத்துச் சண்டை கராத்தே பயிற்றுனரும், பல தேசிய மட்ட வீரர்களை உருவாக்கி வருபவருமான கா.நாகேந்திரம்(வள்ளுவன் மாஸ்ரர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது முல்லைத்தீவு நகரின் சுற்றுவட்ட வீதியிலிருந்து அதிதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பண்டவாத்திய இசைக்கருவிகளுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், வரவேற்புரை, வரவேற்பு நடனம் ஆகிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வுகள் மற்றும் கலைநிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், அதிதிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கல், வீரர்களின் விளையாட்டு அறிமுகம் முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும் இவ் விருது வழங்கும் நிகழ்வில் மூத்த மற்றும் மறைந்த விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பளிப்பு, விளையாட்டுத்துறையில் பிரகாசித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கான கௌரவிப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய, மாகாண போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு, பயிற்றுனர்களுக்கான கௌரவிப்பு, பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றியவர்களுக்கான கௌரவிப்பு, திறந்த போட்டியில் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான கௌரவிப்பு, இடமாற்றலாகிச் சென்ற விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு உள்ளிட்ட மொத்தமாக 297 விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், முல்லை வலயக்கல்விப் பணிப்பாளர், முல்லை உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கிளைத் தலைவர்கள், விழாவிற்கான நிதி அனுசரனையாளர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீரங்கனைகள், பாடசாலை மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.