மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பினை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கினை கட்டுப்படுத்தும் வகையிலான தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவிகள் கோரப்பட்ட நிலையில் கிழக்கில் செயற்படும் சுவிஸ் உதயம் அமைப்பினால் கிணறுகளுக்குள் மீன்கள் விடுவதற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை அமிர்தகழியில் உள்ள பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.கிஷான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார், சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம், சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன்,செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் வறிய மாணவர்களினதும் வறிய குடும்பங்களினதும் மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பு சுகாதார துறையினர் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவியை வழங்கியுள்ளது.
இதன்போது கிணறுகளில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் மீன்குஞ்சு விடும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.இந்த மீன்குஞ்சுகளை கொள்வனவுசெய்வதற்கான நிதியை சுவிஸ் உதயம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்றது.தற்போது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய நிலைமை காரணமாக நுளம்பு பெருக்கத்தின் அளவு அதிகமாக காணப்படுகின்றது.
நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான களப்பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் பல இடங்களில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டுள்ளது.இதனைக்கட்டுப்படுத்துவதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சுவிஸ் உதயம்போன்ற அமைப்புகளுடன் இணைந்து நுளம்பு பெரும் இடங்களை அடையாளப்படுத்தி கிணறுகளுக்கு மீன்கள் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 500கிணறுகள் குடம்பிகளை உண்ணும் மீன்களை இடுவதற்காக இனங்காணப்பட்டுள்ளது.இன்று முதல் கட்டமாக 50கிணறுகளுக்கு மீன்குஞ்சுகள் இடப்படுகின்றது.
மக்கள் அவதானமாக செயற்பட்டு கடந்தகாலத்தினைப்போன்றல்லாது விழிப்பாகயிருந்து டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தி அடுத்தடுத்த மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற டெங்கு நோயின் தாக்கத்தினை அதிகரிக்காமல் எங்களுக்கு ஒத்துழைத்து மக்களுக்கு இழப்புகள் ஏற்பாடாது இந்த பாதகமான சூழ்நிலையில் தொடர்ச்சியாக அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.