ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த அனர்த்தத்தில் குறைந்தது 2,800 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் திங்களன்று (01) தெரிவித்தனர்.
கரடுமுரடான மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமை காரணமாக மீட்புப் பணியாளர்கள் தொலைதூரப் பகுதிகளை அடைய சிரமப்பட்டனர்.
இந்தப் பேரழிவு, போரினால் பாதிக்கப்பட்ட தாலிபான் நிர்வாகத்தினை மேலும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு உதவியில் வீழ்ச்சியால் போராடி வரும் ஆப்கானிஸ்தான், அண்டை நாடுகளால் இலட்சக்கணக்கான ஆப்கானியர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பான பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றது.
காபூலில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஷரபத் ஜமான், உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவியைக் கோரினார்.
குனார் மற்றும் நங்கர்ஹாரின் கிழக்கு மாகாணங்களில் இந்த நிலநடுக்கத்தால் 812 பேர் உயிரிழந்ததாக நிர்வாக செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிபடுத்தியுள்ளார்.
இராணுவ மீட்புக் குழுக்கள் இப்பகுதி முழுவதும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றன.


குனாரில் மூன்று கிராமங்களை நிலநடுக்கம் அழித்தது, மேலும் பலவற்றில் கணிசமான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குனாரில் குறைந்தது 610 பேர் கொல்லப்பட்டனர், நங்கர்ஹாரில் 12 பேர் இறந்தனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு உதவ ஆப்கானிஸ்தானில் ஐ.நா.வின் பணி தயாராகி வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதியில் 1,000 பேரைக் கொன்ற 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தலிபான் அரசாங்கம் எதிர்கொண்ட முதல் பெரிய இயற்கை பேரழிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.















