கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “நான் எப்போதும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்
அந்தவகையில் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், ஒருவர் என்னிடம் கூறினார், வடக்கில் 20 வருடங்கள் கடந்த பின்னர் அப்பா, அம்மா என்றுதான் அழைப்பார்கள்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் வாப்பா, உம்மா என்றுஅழைக்கும் நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டார்.
இதன்போது நான் அவரிடம் கூறினேன், கிழக்கு மாகாணத்தில் 10 அல்லது 15 வருடங்களை கடந்த பின்னர் அப்பா, அம்மா என்பதும் இல்லை வாப்பா, உம்மா என்பதும் இல்லாமல் போய் தாத்தே, அம்மே என்று தான் அழைப்பார்கள்.
இதற்கு காரணம், கிழக்கு மாகாணத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் என்பதை மாற்றி பெரும்பான்மையினர் வாழுகின்ற பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.