நுவரெலியாவின் வசந்த காலம் கிரகரி வாவியில் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றன.
நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட செயலாளர், நுவரெலியா பிரதேச சபை தலைவர், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி, விமானப்படை அதிகாரி, என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டார்.
வருடந்தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், பூப்பந்து, டேபள் டெனிஸ், குழிப்பந்தாட்டம், கிரகறிவாவியில் நீர் விளையாட்டு, மோட்டார் சைக்கிள் தடை தாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் மட்டுப்படுத்தப்பட்ட களியாட்ட விழாக்களே நடைபெறவுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக சில விளையாட்டு நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக உல்லாச பிரயாணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வர வேண்டும் என நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தெரிவிக்கின்றார். மேலும், பொது சுகாதார அதிகாரிகளினால் பிரயாணிகள் கண்காணிக்கப்படுவதோடு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகின்றார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை உல்லாச பிரயாணிகளாக வருபவர்கள் நுவரெலியாவின் இயற்கையையும் அதன் சூழலையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
பொலிதீன் மற்றும் கழிவுப் பொருட்களை அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் போடுமாறும் பாதைகளில் போடுவதன் மூலம் தண்டனைக்குட்பட வேண்டி வரும் எனவும் தெரிவிக்கின்றனர்.