நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள் மட்டுமன்றி ரயில் ஊழியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ரயில் நிலைய அதிபர்களைச் சேர்ப்பது மற்றும் பதவி உயர்வு தொடர்பில் அவசியமான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது ரயில் நிலைய அதிபர்களின் கடமை வினைத்திறனிலும், ஊழியர்களின் மனநிலையிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், அரசாங்கத்தினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனர்த்தக் கடன் தொகையானது ரூ. 400,000/- வரை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில், ரயில்வே திணைக்களத்தினால் அந்தத் தொகையை ரூ. 250,000/- வரை குறைத்து வழங்கத் தீர்மானித்திருப்பது பாரிய பிரச்சினை என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் செயற்பாடானது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தீர்மானத்தை நேரடியாக அவமதிப்பதாக அமைவதோடு, ரயில் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என்பதால், அது தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ரயில் சேவையை முறையாகத் திட்டமிடாமை, கால அட்டவணைகள் சீர்குலைவு மற்றும் செயற்பாட்டு பலவீனங்கள் காரணமாக நாளுக்கு நாள் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதுடன், இந்த நிலைக்குத் திணைக்கள நிர்வாகமே நேரடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.














