இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை.
குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடிய பங்குகள் மட்டுமே தற்போது கையிருப்பில் காணப்படுகின்றது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தற்போது வரை மொத்தம் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் குறித்த தடுப்பூசியின் 356,000 அளவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த பங்குகளில் 91,000 தடுப்பூசிகள் ஜூன் 24 ம் திகதியும், 265,000 தடுப்பூசிகள் ஜூலை 16 ம் திகதியும் காலாவதியாகவுள்ளன.
இந்நிலையில் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகள் அவற்றின் காலாவதிக்கு முன்பே செலுத்தப்படும் என்றும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸுக்குத் தேவையான மீதமுள்ள பங்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கொவிட் தடுப்பூசி கொள்முதல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தயாரிக்கும் பிற நாடுகளுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் வீரதுங்க மேலும் கூறினார்.