மலையகத்தில் எதிர்வரும் காலங்களில் 10 ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா- ஹற்றன் மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது, கொட்டகலையிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு சென்ற அவர், தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றமையை அவதானித்துள்ளார்.
அதன்பின்னர் அப்பகுதியிலிருந்த லயன் குடியிருப்புகளுக்கு சென்று, அங்கு வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துக்கொண்டார்.
மேலும் எதிர்வரும் காலங்களில், பத்தாயிரம் இந்திய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப பணிகள் தொடர்பிலும் மக்களுக்கு இந்திய துணைத் தூதுவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை ஹற்றனிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அதன் நிலைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துக்கொண்டார்.