நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது சட்டரீதியானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ளது என்றும் இது சட்டரீதியானது அல்ல என்ற நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீறுவதாக கைது செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மட்டும் பயணத்தடை காலத்தில் பயணம் செய்கின்றார் என்றும் அவர்மட்டும் எவ்வாறு நடமாட முடியும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.
மேலும் தடுப்பூசி செயற்பாடுகளில் அரசாங்கம் பாகுபாடு காட்டுகின்றது என்றும் குறிப்பாக யாழில் தடுப்பூசி நடவடிக்கைக்கு என 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே அனுப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.