தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், 20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 21 ஆம் திகதியும் மேற்படி விடயங்களை முன்னிலைப்படுத்தி தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
ஆனாலும் இவ்விடயம் தொடர்பாக இதுவரை எந்ததொரு தீர்வையும் வழங்காதமையினால், மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று தொழிலாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என சட்டப்பூர்வமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில். தமக்கு 800 ரூபாயே இன்னும் வழங்கப்படுகின்றது என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நிர்வாகம் தான்தோன்றித்தனமாக தொழிலாளர்களை அடிமைகளாக வழிநடத்தும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.