கிளிநொச்சி, அக்கராயனை பகுதியை ஆண்ட குறுநில மன்னன் அக்கிராசனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களிடம் பாதுகாப்புத் தரப்பினர் இடையூறு விளைவித்த சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழல் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை ஆட்சி செய்த அக்கிராசன் என்ற குறுநில மன்னனுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூலை 05ஆம் திகதியன்று கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் சிலை திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறக்கப்பட்ட நாளான நேற்று மன்னனுக்கு வணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கரைச்சி பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கிராமத்து மக்கள் என ஒரு சிலர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அங்கு பிரச்சனமாகியிருந்தனர்.
எனினும் நேற்றைய நாள் விடுதலைப்புலிகளின் கரும்புலிகளின் நினைவு நாள் என்பதால் நினைவு வணக்கம் செலுத்தவேண்டாம் என்று பொலிஸார் உட்பட்ட படைத்தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடு என்று பொலிஸார் தெரிவித்ததோடு, வேறு ஒரு நாளில் மரியாதை செலுத்துமாறும் அதற்கு தாங்களும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.
பொலிஸாரின் இந்தக் கருத்தை ஏற்காத நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், இந்த நிகழ்வுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் வேறு ஒரு தினத்தில் இந்த நிகழ்வை மேற்கொள்ள முடியாது என்றும் பொலிஸாருக்கு தெரிவித்தனர். இவ்வாறு இரண்டு தரப்பும் பரஸ்பர கருத்து மோதலில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர், பொலிஸாரின் எதிர்ப்பினையும் மீறி நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மன்னனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டபோது அங்கிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் மலர்கள் மற்றும் மலர் மாலையை பறித்து வீசினர்.
அத்தோடு, மன்னனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏற்றப்பட்ட கற்பூரத்தையும் காலால் மிதித்து அணைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.