மன்னாரில் கரையோர பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு, 2ஆவது நாளாக ‘பைசர்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
மன்னார், கரையோர பிரதேசங்களிலுள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
வங்காலை புனித ஆலய வளாகத்தில், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த வங்காலை, அச்சங்குளம், நறுவலிக்குளம், வஞ்சியங் குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அரிப்பு, சிலாவத்துறை, முத்தரிப்புதுறை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திற்கு சுமார் 20 ஆயிரம் ‘பைசர்’ தடுப்பூசிகள், அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.