சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இராகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
ஒன்றிணைந்த பொது அமைப்புகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் தலைமையில், ‘சிறுவர் உரிமை மீறளுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் இராகலை முருகன் ஆலயத்துக்கு அருகில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும், சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை தடை செய்து, அவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், மலையக பெருந்தோட்ட சிறுவர்கள் எதிர்காலத்தில் கல்வி, தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் உரிமையுடையவர்களாக வாழ தனி உரிமை சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு செயலாளர் எஸ்.மோகன்ராஜ், புதிய கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்க தலைவர் சட்டத்தரணி எஸ்.மோகனராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.