காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச நீதிகோரி அவர்களது உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘எமது உறவுகள் எங்கே?’, ‘எமது உறவுகளைத் தேடுவது தேசவிரோமதா?’, ‘எனது உறவுகள் எமக்கு வேண்டும்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “ நாம் போராடும் இந்த பல்கலைக்கழகத்தில் வைத்தே எமது பிள்ளைகளை பிடித்துச் சென்றனர்.
அவர்களுக்கான முடிவு இதுவரையில் கிடைக்கவில்லை. இதே அரசாங்கம்தான் அப்போது பிடித்துச் சென்றது.
மேலும் இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்குவதாக இல்லை. ஆகையால் சர்வதேசம் எமக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு உதவ வேண்டும்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.