கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றோர் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சின் கொவிட் பிரிவு வெளியிடுகின்றது.
அதில் மட்டக்களப்பு பிராந்தியத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 11 ஆகவும் கல்முனை பிராந்தியத்தில் 2 ஆயிரத்து 602 ஆகவும் திருகோணமலையில் 2 ஆயிரத்து 906 ஆகவும் காட்டப்படுகின்றது.
அதாவது மொத்த தொற்றாளர்களாக மட்டக்களப்பில் 4 ஆயிரத்து 811, கல்முனையில் 3 ஆயிரத்து 916, திருகோணமலையில் 3 ஆயிரத்து 561 என்று கொழும்பில் இருந்து வெளியாகும் சுகாதார அமைச்சின் கொவிட் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், உரிய பிராந்தியங்களில் இருந்து வெளியிடப்படும் தரவுகளைப் பார்த்தால் கொரோனாவின் மூன்றாவது அலையிலே மட்டக்களப்பில் 14 ஆயிரத்து 882 தொற்றாளர்கள், கல்முனையில் 4 ஆயிரத்து 761தொற்றாளர்கள், திருகோணமலையில் 3 ஆயிரத்து 516 தொற்றாளர்கள். இது மூன்றாவது அலையில் மாத்திரம்.
கொழும்பில் காட்டப்படுகின்ற தரவுகள், மாவட்ட ரீதியான தரவுகளுக்கு சுமார் மூன்று மடங்கிற்கும் குறைவான தரவுகள் காட்டப்படுகின்றன.
அதேபோன்று கொரோனா மரணங்களைப் பார்த்தோமானாலும் 2021.08.26ம் திகதிக்குறிய தரவின் படி மட்டக்களப்பில் 24 மணிநேரத்தினுள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10, திருகோணமலையில் 07, கல்னையில் 01 என்று காட்டப்பட்டுள்ளது. இதனை நாங்கள் நம்ப முடியுமா?
இவ்வாறு நோயாளிகளின் எண்ணிக்கையில், பொய்யான தரவுகள் வெளியிடுகின்றார்கள் என்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை எவ்வாறு உண்மையானது என நம்ப முடியும்?
கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே இவ்வாறு என்றால் இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் மற்றும் யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை நாங்கள் எவ்வாறு நம்புவது? இதே அரசாங்கம் தான் அந்த நேரத்திலும் இருந்தது.
இந்த உயிரிழப்புகள் அனைத்துக்குமான காரணம் தடுப்பூசி உரிய காலத்தில் வழங்காமை. உண்மையில் இலங்கையில் 88 வீதமானவர்களின் இறப்பு இரு தடுப்பூசிகளையும் பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
மேலும் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை கிடைத்த இரண்டாவது தடுப்பூசியின் விகிதாசாரம் பூச்சியமாகும் அதேபோல் திருகோணமலையிலும் பூச்சியமாகவே இருக்கின்றது. மட்டக்களப்பில் மாத்திரம் இரண்டாவது தடுப்பூசி 32 வீதம் கிடைத்திருக்கின்றது” என அவர் சுட்டிக்காட்டினார்.