வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மனுவல் உதயச்சந்திரா மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சர்வதேசம் எங்களை திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி பல வருடங்களாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றோம்.
ஆனால், இன்று வரை இந்த விடயத்தில் எந்ததொரு முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதேவேளை, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்சினைகளுக்கு மத்தியில் நாங்கள் போராட முடியாத நிலையில், வீடுகளில் இருந்து தாய்மார் அழுது கொண்டு இருக்கிறார்கள்.
எனினும் நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.
எங்கள் பிள்ளைகளை எங்களிடம் மீண்டும் ஒப்படையுங்கள் அல்லது என்ன நடந்தது என்று கூறுங்கள். அது வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பணத்திற்காக போராடவில்லை. நீதிக்காக போராடுகின்றனர். அதை அரசாங்கமும் சர்வதேசமும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சர்வதேசம் நாடகம் ஆடுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.