மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கும், மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்குமாக இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பண்ணையாளர்களது குறைகளை கேட்டறிவதற்காக கரடியனாறு அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் சென்று அங்கு பண்ணையாளர்களை சந்தித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் பண்னையாளர்களது பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருந்தனர்.
இதன்போது பண்னையாளர்களால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், நாட்டின் பால் உற்பத்தியில் கிழக்கு மாகாணம் 18 வீதமான பங்களிப்பினை வழங்குவதாக சுட்டிக்காட்டிய பண்ணையாளர்கள் தமக்கு பண்ணைகளை அமைப்பதற்காக இரண்டு ஏக்கர் வீதம் காணிகளை கோறியதுடன், தமக்கு நீண்டகால பிரச்சனையாகவுள்ள மேச்சல் தரை பிரச்சனையினையும் தீர்த்துத்தருமாறும் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலின்போது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் தேனுக வித்தானக, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளருமான ப.சந்திரகுமார், மற்றும் அரச கால்நடை வைத்தியர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.