பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னார், பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ரஞ்சன் ரவிக்குமார் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வவுனியா ஊடக மையத்தின் செயலாளர் க.ஜனகதீபன், வவுனியா தமிழ் ஊடக சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார், வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதி சனத்பிரியந்த உள்ளிட்ட ஊடக சங்க பிரதிநிதிகளே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”எமது ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ள ரஞ்சன் ரவிக்குமார் பங்குத்தந்தை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். மன்னார் கோவில் மோட்டை பகுதியில் அமைந்துள்ள விவசாய காணிதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கும், பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஒன்று இடம்பெற்றது.
அந்த முரண்பாடு தொடர்சியாக இடம்பெற்று வந்த சந்தர்ப்பத்தில் அங்கு கடமை நிமித்தம் சென்ற எமது ஊடகவியலாளர் அதனை காணொளியாக பதிவுசெய்து வெளியிட்டிருந்தார். அதனை வெளியிட்டு சில மணிநேரங்களிலேயே அன்றையதினம் குறித்த ஊடகவியலாளருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பெரியபண்டிவிரிச்சான் பங்குத்தந்தை, நாங்கள் உங்களை என்ன செய்கின்றோம் என்று பாருங்கள் என்று கூறி அவரது உயிருக்கும், தொழிலுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அச்சுறுத்தல் விடுத்த அன்றையதினமே, குறித்த ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்துள்ளனர். இதன்போது அவரது வீட்டினை சுற்றி இனம் தெரியாத நபர்கள் நடமாடியதுடன், வீட்டின் மீதும் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளுமே வீட்டில் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியிருந்தார். எனினும் அதன் பின்னரும் குறித்த ஊடகவியலாளர் மீதான மறைமுகமான அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
இதுவரை பல்வேறு தரப்புக்களால் ஊடகவியலாளர்கள் அச்சுறுப்பட்டிருந்தாலும், இன்று கத்தோலிக்க மதகுரு ஒருவரால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகும் துர்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஒரு மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்குத்தந்தை ஒருவர் எப்படி நடந்து கொண்டார் என்ற விதத்தினை அந்த காணொளியினை பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக இந்தப் பி்ரதேசத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் எவரும் வாய் திறக்காத நிலை காணப்படுகின்றது.
இதேவேளை, மன்னார் ஆயர் இல்லத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அங்கு கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாகவோ அல்லது ஊடவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பிலோ எந்தவித கரிசனையினையும் செலுத்தப்படவில்லை.
ஆகவே, இந்தச் சம்பவம் மன்னார் ஆயரது ஆசிர்வாதத்துடன், பங்குத்தந்தையும், மடு பரிபாலகரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம். தங்களது பிழையினை மறைப்பதற்காக ஒரு தலைபட்சமாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளதாக ஊடகசந்திப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.
வடமாகாண ஆளுனர் மற்றும் காணி ஆணையாளர் ஆகியோர் கோவில்மோட்டை விவசாயக்காணி பொதுமக்களுக்கே சென்றடையவேண்டும் என்று கடிதம் மூலமாக அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அது தொடர்பான செய்தியினை வெளியிட்டமை ஒரு தலைபட்சமானது என்றால் ஆளுனரும், காணி ஆணையாளராலும் எடுக்கப்பட்ட முடிவும் ஒரு தலைபட்சமான செயற்பாடா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.
தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடவேண்டும் என்று நினைப்பதும், ஒரு வகையில் ஊடக அடக்குமுறை தான். இதுவரை போரிற்கு பின்னரான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த அங்கத்தவர்கள் யாரும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை.
ஆனால், பங்குத்தந்தையின் செயற்ப்பாட்டினை களத்தில் இருந்து காணொளியாக பதிவுசெய்து அதன் உண்மை பிரதியினை வெளியிட்டமைக்காக ஊடகவியலாளர் அச்சுறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததுடன், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. குறித்த தரப்புக்களால் எமது ஊடகவியலாளருக்கு எதேனும் ஆபத்துக்கள் ஏற்ப்பட்டால் அதற்கான பின்விளைவுகளை நிச்சயம் சந்திக்க வேண்டிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி கிள்ளுக்கீரையாக்கும் செயற்ப்பாட்டிற்கு இனியும் இடமளிக்க முடியாது. எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பங்குத்தந்தையை காவல்த்துறையினர் அழைத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வடகிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து நீதிக்கான போராட்டத்தில் குதிப்போம்” எனவும் தெரிவித்தனர்.