நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
200 மாணவர்களுக்கு குறைவாக மாணவர்களது எண்ணிக்கைகளை கொண்ட பாடசாலைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 35 பாடசாலைகள் இன்றைய தினம் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மாணவர்களது வருகை மிக மந்த கதியில் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பரவலான பாடசாலைகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் வருகை தந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிலுனர்கள் மாத்திரமே வருகை தந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
நகரை அண்டிய பாடசாலைகளை விட கிராமப் புறங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர்களது வருகை ஒப்பிட்டளவில் அதிகமாக காணப்பட்டது.
மேலும் பாடசாலை சீருடைகள் அல்லாத வேறு ஆடைகளில் அதிகமான மாணவர்களை காணக்கூடியதாக இருந்ததும் குறிப்பிடத்தகது.