உள்ளி, சீனி,தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களுடனான மோசடியை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மூடி மறைக்கிறது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் பிணைமுறி மோசடியாளர்களை தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் இரண்டாண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அக்கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தினால் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள் என்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உர இறக்குமதியில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த இறக்குமதிக்கான நிதி மத்திய வங்கியின் திறைச்சேரி ஊடாக வழங்கப்பட வேண்டும் ஆனால் நிதி ஒரு தனியார் வங்கி வைப்பின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டார்.