பெயரளவிலேயே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியில் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்த மாவட்டம் கிராமிய பொருளாதாரம்,விவசாயத்தில் தங்கியுள்ள மாவட்டம்.இந்த நாட்டின் உணவுத்தேவைக்கான பெருமளவான அரிசியை வழங்கும் மாவட்டம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுத்தால் அந்த முடிவினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு என்ன நன்மை, அந்த முடிவினால் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.
யூரியா பாவனையால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது, மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது. மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி பாடசாலைச் சிறுவர்களுக்கு 20வீதமளவில் சிறுநீரகம் செயலிழப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இன்னும் இருபது வருடங்களில் சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும்.
சேதனப் பசளை திட்டத்தினால் சில பிரச்சினைகள் உள்ளன. அதனை நாம் வெல்வோம். வயலுக்குள் குலைகளை வெட்டி மாட்டெரு,ஆட்டெரு என்பவற்றை போட்டு கடின உழைப்பை செய்தால் நான்கைந்து வருடங்களுக்கு நல்ல விளைச்சலை பெற முடியும். அதனால் நோய்களும் ஏற்படாது. சுகாதாரச் செலவுகள் குறைவடையும். ஆயுளும் அதிகரிக்கும்.
அதனை விடுத்து அசேதனப்பசளைகளால் நாற்பது வயதிலேயே நீரிழிவு, சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படுகின்றது. நூறு, இருநூறு ஆண்டுகளில் இது பெரும் சமூக அழிவாக மாறும்.
இப்படியான சூழலில் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் புலம் பெயர்ந்தவர்களும் இயற்கைக் கழிவுகளையும் ஆட்டெரு, மாட்டெரு, இலைகுலை கழிவுகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் வழங்கி முழு இலங்கைக்கும் சேதனப் பசளையை விநியோகிக்க முடியும்.
அதனை விடுத்து இந்த போலித் தேசியவாதிகள் விவசாயிகளை கொல்லாதே, குழிதோண்டி புதைக்காதே என கைகளில் பதாகைகளுடன் கோஷமிடுகின்றனர். உண்மையான தேசியம் என்பது அரச கொள்கையோடு சேர்ந்து மக்களை வாழவைப்பதாகும். போலித் தேசியம் பேசுகின்றவர்கள் தங்களால் முடிந்தால் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசி நாங்கள் இங்கு வழங்குகின்ற பத்து ஏக்கர் காணிகளை பயன்படுத்தி சேதனப் பசளையை உற்பத்தி செய்யும்படி கூறுங்கள், இங்கிருக்கின்ற பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்படி கூறுங்கள். முழு நாட்டிற்கும் உரத்தை வழங்கக்கூடிய நிறுவனமாக மாற்றினால் நாங்கள் மட்டக்களப்பில் தீர்மானிக்கின்ற சக்தியாக வர்த்தகத்தில் மேம்பட முடியும்.
உரத்தை போடாமல் செய்து மக்களை நாளை பட்டினிச் சாவிற்குள் தள்ள வேண்டாம். நல்ல முடிவுகளை எடுக்கின்ற போது அதிலிருக்கும் கசப்பான விடயங்களை மாத்திரம் எடுக்காமல் அதனை தாண்டி சமுதாய நலன் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமான தேச நலனோடு ஒட்டி மட்டக்களப்பை, கிழக்கு மாகாணத்தை வாழவைக்க வேண்டும். நாங்கள் வரலாறுகளையும் இனிய தமிழையும் பேசுவதால் தொடர்ந்தும் கிழக்கு மாகாணத் தமிழர்களை மேம்படுத்த முடியாது. நடைமுறைச் சாத்தியமான பொருளாதார ரீதியான கல்வி ரீதியான மாற்றத்தை செய்ய வேண்டுமானால் மட்டக்களப்பு தமிழர்களின் ஒத்துழைப்பு மிகமிக அத்தியாவசியமாக இருக்கின்றது. அதற்கு அரசியல் தீர்மானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது.
இன்று பெயரளவிலே தமிழர்களின் தலைவன் என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற சம்பந்தன் அவர்களின் திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் அடையாளமே இல்லாமல் போகின்ற துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றது. அவர் இறக்கின்றபோது விட்டுச்செல்கின்ற விடயம் யாதெனில் திருகோணமலையை அழித்துவிட்டுச் சாகின்றேன் என்பதாகும். தமிழர்களை வாழவைத்துவிட்டுச் செல்கின்றேன் என அவரால் நிச்சயம் சொல்ல முடியாது.
முதலமைச்சராக நான் இருந்தபோது நூறு ஏக்கர் காணியை பெற்று மாகாணசபையை மட்டக்களப்பிற்கு மாற்ற இருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் அது தேவையில்லை என்ற முடிவிற்கு வந்தேன். மாகாணசபையை மத்திய மாவட்டமாகிய திருகோணமலையிலிருந்து நகர்த்திவிட்டால் அங்கு சம்பந்தனின் வீடுகூட இல்லாமல் போகக்கூடிய சூழல் இருக்கின்றது.
சிங்கள மக்கள் ஆட்சியமைக்கின்றார்கள் என்பதற்காக இதனை சொல்லவில்லை. தமிழர்களுக்கான வேலைத்திட்டம் அங்கில்லை. விவசாயிகளுக்கோ மீன்பிடியாளர்களுக்கோ நம்பிக்கை தரக்கூடிய தலைவர்கள் அங்கில்லை. காணிபிடித்து விற்பவர்களும் போதைக்கு அடிமையாகி உழைப்பவர்களுமே அங்கும் இருக்கின்றார்கள்.
ஆகையால் போலியாக இயங்காமல் உண்மையாக நேர்மையாக இயங்க வேண்டும் இல்லாவிட்டால் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பேரப்பிள்ளைகளோடு வாழ வேண்டும்.
இந்த மண்ணில் நாங்கள் வாழ்கின்றோம் என்ற அடிப்படையில் இந்த மண்ணிலிருந்துதான் வருமானத்தை ஈட்ட வேண்டும்.எங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டி சிறந்த பொருளாதாரம், கல்வியை கொடுப்பதற்கான சூழலை உருவாக்க நாம் பாடுபடவேண்டும். இங்கு குடும்ப பிணக்குகள் அதிகமாக இருக்கின்றன.
இவற்றையெல்லாம் குறைக்கக்கூடிய அறிவு சார்ந்த மாற்றங்களை உருவாக்கி தனித்துவமாக வாழக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு உங்களோடு இணைந்து நானும் பாடுபடுவேன். எங்களால் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவதுபோல எங்களால் வழங்கப்படுகின்ற பொருட்களும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். “ என தெரிவித்தார்.