அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உடபளாத பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அத்துடன், தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்து பேரணியாக நயப்பன அம்மன் ஆலய சந்தி முன்பாக ஆரம்பமாகி நயப்பன பஸ் தரிப்பிடம் வரை சென்று, அங்கு பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
” அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு எதுவும் இல்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.