கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் நீதியான விசாரணையை நடாத்தி இந்த மாணவர்களுக்கான நஸ்ட ஈடுகளை வழங்கவும் முன்வரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வாறான பயணங்களை மேற்கொண்டு பாடசாலைகளுக்கு செல்லும் சூழ்நிலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பகுதி பகுதியாக மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு அழைக்கப்படும் நிலையில் பரீட்சைகளுக்கு மாணவர்களை முழுமையாக அழைக்கும் நிலையுள்ளதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதுடன் சுகாதார வழிமுறைகளையும் சுற்றுநிரூபங்களையும் பேணுமாறும் உதயரூபன் தெரிவித்தார்.