மட்டக்களப்பு- கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
கிரான்குளம் விளையாட்டு மைதானத்தினை மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர், வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளும் நடவடிக்கையினை கண்டித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கிரான்குளம் பகுதியை சேர்ந்த விளையாட்டுக்கழக இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்ட பகுதியை, தனது காணியென கூறி மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் அபகரிக்க முனைவதாகவும் இதன்போது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அண்மையில் குறித்த பகுதிக்கு வந்த மண்முனைப்பற்று பிரதேச செயலாளர், குறித்த காணி தொடர்பில் எந்த செயற்பாட்டினையும் மேற்கொள்ளவேண்டாம் என தெரிவித்திருந்த நிலையிலும் குறித்த காணியை தவிசாளர் வேலியிட்டு அடைத்துள்ளதாகவும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, குறித்த காணியை விளையாட்டு மைதானத்திற்காக முழுமையாக பெற்றுத்தருமாறும் தவிசாளரின் செயற்பாடுகளை கண்டித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் சிலர் கோசங்களை எழுப்பியதையும் காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.