நாடு முழுவதும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவரும் நிலையில் தமது உயிருக்கு பாதுகாப்பு தேடும் வகையில் லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு வலியுறுத்தி, மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ காஸ் விநியோகஸ்தர் நிலையத்துக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரதேச வாழ் மக்களுக்கு பாரிய உயிராபத்து மற்றும் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய எரிவாயுக் களஞ்சியத்தை, பொருத்தமான இடத்திற்கு இடமாற்றுமாறு வலியுத்தியே கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எமது உயிருக்கு யார் உத்தரவாதம்?, தற்போதைய தரமற்ற எரிவாயு விநியோகத்திற்கு யார் பொறுப்பு?, ஏழைகளின் உயிரா? பண பலமா?, எங்கள் பிள்ளைகளின் உயிருடன் விளையாடாதே, ஆரோக்கியமான சந்ததியாக நாம் வாழ வழி விடு போன்ற பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.