திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஈஸ்வரபுரம் மற்றும் மேரிக்கிராமம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பயன்படுத்திய பொது மைதானமானது இரவோடு இரவாக தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டதை எதிர்த்து குறித்த கிராம மக்களால் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் புதிதாக குடியேறுவதற்காக குறித்த மாதிரி கிராமானது முன்மொழியப்பட்டு அங்கே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு தற்போது அங்கே 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவித்தனர்.
குறித்த கிராமத்தில் பொதுத் தேவைகளுக்காக ஒன்றுகூடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்துவதற்காக தாம்மால் இவ்வளவு காலமும் பயன்படுத்தப்பட்ட குறித்த காணிப் பகுதியானது திடீரென ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கே எல்லைக் கற்கள் நடப்பதை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக தாம் பிரதேச செயலாளரிடமும் கிராம சேவகரிடமும் அறிவித்த போதிலும் தமக்கு சரியானதொரு பதில் கிடைக்கவில்லை என்பதால் இது அதிகார மட்டங்களில் இருப்பவர்கள் தமது சுய அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக செயற்படுகின்றார்கள் என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த காணி பகுதியில் சிறுவர் பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா பேரிடர் காரணமாக குறித்த முயற்சியானது தடைப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த காணியானது பிறிதொருவருக்கு கொடுக்கப்பட்டமை தம்மை வேதனைக்கு உள்ளாக்குகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு தமது விளையாட்டு மைதானத்தினையும் பொது ஒன்றுகூடல்களை முன்னெடுப்பதற்காக தம்மால் பயன்படுத்தப்பட்ட காணியினை மீட்டுத்தருமாரும் குறித்த கிராம வாசிகள் கோரிக்கை விடுத்தனர்.