மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைசெய்யப்படும் நெல்லுக்கு தளம்பல் இல்லாத விலையினைப்பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்கான பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சில முக்கிய தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டது.
வவுணதீவு நாவக்காடு வீதித் திருத்தம், வைத்தியசாலைக்கான ஆளணிப் பற்றாக்குறை மற்றும் அப்பிரதேசத்திற்கான கால்நடை வைத்திய அதிகாரிகளின் தேவை, உடைந்த நிலையில் காணப்படும் கரவெட்டி மகிளவெட்டுவான் பாலத்தினை திருத்தம் செய்வது, பன்சேனையிலிருந்து, தாந்தாமலைக்கான பஸ் சேவையினை முன்னெடுப்பது, பத்தரைக்கட்டை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்பன தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கண்டியனாறு மாவடித்தட்டு பெரியகுளத்தினை அமைத்து அதன் மூலமாக செய்கைபண்ணுப்படாது காணப்படுகின்ற பல ஏக்கர் விவசாய நிலங்களை விவசாயத்திற்கென பயன்படுத்தி அதனூடாக விளைச்சலை அதிகரிப்பது, யானைத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக தேவையான இடங்களில் யானை வேலிகளை அமைப்பது.
1,2 ஏக்கருக்கும் அதிகமான தென்னந் தோப்புகளை பதிவு செய்வது அத்துடன் அறுவடைக் காலம் நெருங்குவதால் விவசாயிகள் பாதிப்படையாத வண்ணமும் நெல் விதைகளின் விலைகளில் தளம்பல் ஏற்படாத வண்ணமும் விலைத்தீர்மானங்களை மேற்கொள்வது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் ஜனா கருணாகரம், பிரதேச செயலாளர சுதாகர்; திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட துறை சார் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.