எனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு திலீபன் எம்பியே பொறுப்புக்கூறவேண்டும் என்று ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அபிவிருத்திச் சங்க செயலாளர் வ. சற்குணவதி தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நிர்வாகத்திறனற்றவர் என தெரிவித்து பெற்றோர் சமூகத்தால் இன்றையதினம் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அபிவிருத்திச்ங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நாம் இன்றுபோராட்டம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் அலுவலகத்தில் இருந்து கதைப்பதாக தொலைபேசி அழைப்பொன்று வந்தது.அழைப்பை ஏற்ப்படுத்திய அவர் ஆர்பாட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடில் இதற்கான பின்விளைவுகளை சிலநாட்களில் அனுபவிப்பீர்கள் என்று அச்சுறுத்தியிருந்தார்.
குறித்த அதிபர் விடயத்தில் அரசியல் வாதி ஒருவர் தலையிடுகின்றமை எமக்கு தெரியும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலையிடுகிறார் என்று எமக்கு தெரியாது. ஆனால் இன்று அவரது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையால் எமக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ எதும் நடந்தாலும் அவரே பொறுப்புக்கூறவேண்டும். என்றார்