தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இதனை கூறினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் 137 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெற்றோல் விலை தற்போது 184 ஆக உயர்ந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
மேலும் பெற்றோல் விலை அதிகரிப்புடன், முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கவும் டீசல் விலை அதிகரிப்பு மீனவர்களை நேரடியாகப் பாதித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆட்சிக்குவந்து சில வாரங்களுக்குள் விலைவாசியை மீண்டும் ஒருமுறை உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதோடு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
வெளிநாட்டு கையிருப்பு 600 மில்லியன் டொலர்கள் மட்டுமே இருப்பதாகவும் இது நாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கான எரிபொருளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டின் நிதி நிலை தொடர்பாக அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பது சில அமைச்சர்களின் கருத்துக்களில் புலனாகிறது என்றும் எனவே அன்னிய கையிருப்பு தொடர்பான தரவுகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
தற்போது 47,000 மெட்ரிக் டொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சுமார் 2,000 கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்கவோ அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.