இலங்கை தொடர்பான ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை இம்முறை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஏற்கனவே கடிதம் ஒன்றை சக நாடுகளுக்கு அனுப்பியுள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஐ.நா.வுக்கு கடிதங்களை அனுப்பவுள்ளதாக கூறினார்.
ஒன்றிணைந்து கடிதம் அனுப்புவதற்கு காலஅவகாசம் எடுக்கும் என்பதனாலேயே தனியாகவே கடிதங்களை தமிழ் பேசும் கட்சிகள் அனுப்பவுள்ளதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு ஆதரவாக விடயங்களை திரட்டம் முகமாகவே அமைச்சர்கள் அலி சப்ரி, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் வடக்கில் நீதிச் சேவை முகாம்களை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்டுவதற்கு பெரும் முயற்சியை அவர்கள் எடுத்து வருகின்றனர் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.