வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி விற்பனை நிலையங்களிற்கு கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறீ ஜயசேகர நேற்று (சனிக்கிழமை) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது வேப்பங்குளம், அம்பலங்கொடல்ல ஆகிய பிரதேசங்களில் உள்ள நெசவு பயிற்சி நிலையம் மற்றும் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கைத்தறி நெசவு உற்பத்தி விற்பனை நிலையங்களிற்கு சென்று அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக பார்வையிட்டிருந்தார். அத்தோடு அங்கு நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார்.
மேலும் நெசவு உற்பத்தியில் சிறப்பாக செயற்பட்டு வரும் 05 பேருக்கு அமைச்சின் ஊடாக மூலப்பொருட்கள் வழங்கி வைத்ததுடன், இரு பயிற்சி நிலையங்களிற்கும் கைத்தறிகளும் வழங்கி வைத்திருந்தார்.இதன் போது மரக்கன்று ஒன்றினை அமைச்சரினால் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட தொழிற்துறை உத்தியோகத்தர் சு.ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறீ ஜயசேகர, வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சியின் இணைப்பாளர் வாசல, தொழிற்துறை திணைக்கள உயர் அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.