போதைப்பொருள் பாவனையை நாட்டில் முற்றாக ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபையின் கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றிருந்தது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் இதுவரையிலான முன்னேற்றங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதில் முக்கிய காரணியாக அமைந்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் மற்றும் போதைப் பொருள் தொடர்பான கைதுகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதை சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிபரங்கள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்துனடன் இவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பாக, வெளிப்படைத்தன்மையுடனும் வினைத்திறனுடனும் கூடிய பொறிமுறையொன்றை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, அது தொடர்பான சட்டங்களைத் திருத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக வலுவான நீதிமன்ற கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதோடு
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக சுகாதார அமைச்சு, பாடசாலை மட்டம் மற்றும் அரச நிறுவனங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

குறிப்பாக, பாடசாலைகளுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான புதிய போக்குகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக புனர்வாழ்வுச் சட்டத்தைத் திருத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டதுடன், அதற்கான யோசனைகளை விரைவில் பெற்று, அதனை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்கள் உருவெடுத்த போதிலும், போதைப்பொருள் ஒழிப்புக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் எக்காரணம் கொண்டும் தடைப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியதுடன், அதற்காகத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.













