கட்டானவின் போலவலன பகுதியில் புதன்கிழமை (29) இரவு இரண்டு பதின்ம வயதினரின் உயிரைப் பறித்த கொடிய வீதி விபத்தைக் காட்டும் பரபரப்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு – மினுவாங்கொடை சாலையில் உள்ள கொள்கலன் முனையம் (container yard) ஒன்றிற்குள் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் டிரெய்லர் மீது, அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதும் காட்சியை அந்தக் காணொளி காட்டுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த18 மற்றும் 19 வயதுடைய சாரதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் கூடியிருந்த சிலர் அந்த கனரக வாகனத்துக்கு தீ வைத்தனர்.
நீர்கொழும்பு, மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் கட்டான பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து மற்றும் அந்த வாகனம் மீதான தீவைப்புச் சம்பவம் ஆகிய இரண்டும் குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிரிவர்தன மற்றும் 19 வயதான கவிந்து ஹஷான் சோமதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காணொளியைக் காண இங்கே அழுத்தவும்:













