மட்டக்களப்பு மாநகரசபை ஊடாக வட்டாரத்திற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் உலக வங்கியின் நிதியுதவியுடனும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபை மூலம் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்கு வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை 9ஆம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
மக்கள் பயணிக்க முடியாத நிலையில் மிக மோசமான நிலையிலிருந்த குறித்த வீதி மாநகரசபையின் 2.5மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்கிறிட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.
திருப்பெருந்துறை வட்டார மாநகரசபை உறுப்பினளர் மா.சண்முகலிங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த வீதி புனரமைக்கப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
மாநகரசபை உறுப்பினர் மா.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான இராஜேந்திரன்,து.மதன்,பூபாலராஜா,சசிகலா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.