குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் விமான நிலையத்தை மூட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளின் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவன்ட்-கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை கைது செய்வதற்கு இன்டர்போல் உதவியை நாடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விஜித் ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் மனுவொன்றையும் தாக்கல் செய்தார்.
பொது நிதியை கொள்ளையடித்த அவன்ட்-கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது நிதியைக் கொள்ளையடித்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் விமான நிலையத்தை மூடி, அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.