அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்வேறு தரப்பினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்புநிலை பாதிக்கப்பட்டள்ளதுடன் பெரும்பாலான அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்காத நிலையிலேயே காணப்படுகின்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய தினம் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலையினையடைந்துள்ளது.
சில பாடசாலைகளில் உயர்தர பிரிவு மாணவர்கள் வருகைதந்த நிலைமையினை காணமுடிந்தது. பெரும்பாலான பாடசாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் வரவு மிகவும் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
பிரதேச செயலகங்கள் திறந்திருந்தபோதிலும் உத்தியோகத்தர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டதுடன் மக்கள் வரவும் இல்லாத காரணத்தினால் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.இதேபோன்று தபால் திணைக்களங்களங்கள் மூடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.
தனியார் மற்றும் அரச போக்குவரத்துச்சேவைகள் வழமைபோன்று சேவைகளில் ஈடுபட்டுவருகின்றதை காணமுடிந்தது.