உணவுப் பாதுகாப்பிற்கான விரிவான அரச-தனியார் கூட்டுத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல நாடுகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் பயிர்ச் செய்கையைக் கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைத் தணித்தல் தொடர்பாக கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் இறக்குமதி, விநியோகம், முறையான மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்காக தேசிய உரக் கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இரசாயன அல்லது கரிம உரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் முழு ஈடுபாட்டின் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
இந்த பணியை வெற்றியடையச் செய்வதற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்பு வழங்கி முன்னுதாரணமாக அமைய வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.