ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து, கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலங்களில் எழுத்து மூலம் செய்யப்பட்ட உறுதிப்பாடுகள் மனதால் இணைந்த உறுதிப்பாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். தற்போதைய அரசோ நிலையற்ற அரசு. இந்த அரசால் எந்த ஒரு பிரச்சினையையுமே தீர்க்க முடியாது. குறைந்தது தற்போதுள்ள பொருளாதார பிரச்சனையை கூட தீர்க்குமா என்பதே கேள்விக்குறி.
தற்போதைய அரசும் சிங்கள பௌத்த விடயங்களை பாதுகாக்கின்ற ஒன்றே. எழுத்து மூலமான ஒப்பந்தங்களோ வாய் மூலமான ஒப்பந்தங்களோ அவர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே அன்றி அதனால் இந்த பலனும் கிடையாது.
எமது கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் தற்போதைய அரசாங்கத்தில் இணைய மாட்டார் என முழுமையாக நம்புகின்றோம். ஆனால் அவர் அரசாங்கத்தில் இணைவாரா இல்லையா என்பதை உறுதியாக கூற முடியாமலே இருக்கின்றோம்.
அவர் எடுக்கின்ற முடிவுகள் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாகவோ அல்லது பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவோ அமையவில்லை என்பது மன வருத்தத்துக்குரிய விடயம். ஆனாலும் ஒரு துரதிஷ்டமான ஒரு முடிவு ஏற்படாது என்றே நாம் நம்புகின்றோம்.
ஆனால் தன்னிச்சையான முடிவை எடுத்து ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன்” என்றார்.