இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொதுச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது:-சர்வதேச ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க வாதியான ஜோசப் ஸ்டாலினை மகிந்தராஜபக்ஷ் மற்றும் ரணில் அரசு கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதை கண்டித்து இப்போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்பாக நடக்கிறது.
அறவெளிப் பேராட்டத் தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராட்டக் காரர்களை அவசரகாலச் சட்டத்தின் மூலமாக நசுக்குவதற்கு இந்த அரசு முற்பட்ட வேளையில் அவர்களுக்காக குரல் கொடுத்தமைக்காக எமது பொதுச் செயலாளர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சட்டங்களான ஐ.சி.சி.பி எனப்படுகின்ற சட்டத்தினை மையமாக வைத்துக் கொண்டு கூறினார்- இதற்கு நான் உடந்தையாக இருப்பேனே தவிர எதிராக இருக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இச்சட்டங்களையெல்லாம் மீறித்தான் எமது பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்- இத்தகைய கைது நடவடிக்கையை நாம் வன் மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.