மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம் 6 திகதி இடம் பெற்றதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் இடம் பெற்று நேற்று காலை சங்காபிஷேக நிகழ்வு வெகு விமரிசையாக இடம்பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் தர்ம ஆதீன மடத்தின் இலங்கைக்கான முதல்வர் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரம் தம்பிரான் முன்னிலையிலேயே சங்காபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
யாகங்கள் இடம் பெற்று பரிவார மூர்த்திகளுக்கான யாகங்களும் இதன்போது இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து கும்பங்கள் உள்வீதியுலா எடுத்துவரப்பட்டு பிள்ளையார், சிவன், அம்பாள் ஆகியோருக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு வெகு விமர்சையாக 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர தேனமுது கும்பாபிஷேக விசேட மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு இந்துக்கல்லூரியின் ஓய்வு நிலை முதல்வர் நூலாசிரியர் தம்பிப்பிள்ளை முத்துக் குமாரசுவாமி நூலை வெளியிட்டு வைக்க, தர்ம ஆதியின இலங்கைக்கான முதல்வர் ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரம் தம்பிரான் நூலை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.