மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மாவட்ட நிலைக்கு உட்பட 126 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான சந்தர்ப்பத்தினை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் சிறப்பு வெளியீட்டை வெளிப்படுத்திய பாடசாலைகளுக்கு நேற்று மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றுசாதனை படைத்துள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு உயர்தரப்பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினார்.
இலங்கையில் விஞ்ஞான துறையில் முதலிடம்பெற்ற மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உட்பட சாதணை படைத்த மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்துக் கொண்டார்.
இதன்போது மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சுபாகரன் உட்பட கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து புனித வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை, புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை, சிவானந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் கல்லூரி உட்பட பல பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டினை விட 11வீத சித்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு அர்ப்பணிப்பு செய்த ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.