வடக்கு- கிழக்கில் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்தக் கோரியும்,குறித்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் சுற்றுவட்ட பகுதியில் குறித்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள் ,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களை துன்புறுத்துவதை நிறுத்து,தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்,இலங்கை அரசே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு,எமது நிலம் எமக்கு வேண்டும், கருத்துச் சுதந்திரம் எமது உரிமை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.