கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவாகிய மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்தார்.
நேற்று தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் பேசிய அவர், விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பனவற்றால் மக்கள் பெரும் இன்னல்களை சந்திப்பதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் மூன்று வேளை உண்டு வாழ்ந்த மக்கள், தமது உணவு வேளையை சுருக்கியுள்ளனர் என்றும் பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் சுமைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய உதயகுமார், தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ள நிலையில் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
அதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியாக குரல் கொடுப்போம் என்றும் மற்றையவர்களைபோல ஏமாற்று அரசியல் நடத்த மாட்டோம் என்றும் உதயகுமார் தெரிவித்தார்.